பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்

‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

காட்சிப் பொருண்மைகள்

இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக, ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள் போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

அரங்குகள்

தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம் பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவத்தாலான அன்னம், காளை, மரத்தூண்கள், கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம், உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.